“எனது பதவி பெரிதல்ல உங்களுடைய குரல்தான் வலிமையானது” - போராட்ட களத்தில் மருத்துவர்களை சந்தித்து மம்தா பேச்சு


கொல்கத்தா: கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்களை நேற்று போராடும் இடத்திற்கே சென்று முதல்வர் மம்தா சந்தித்தார்.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஒரு மாதத்துக்கு மேல் போராடி வரும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்புமாறு உச்ச நீதிமன்றம் கெடுவிதித்த பிறகும், போராட்டம் நீடித்து வருகிறது.

இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்த மேற்கு வங்க அரசு அழைப்புவிடுத்தது. ஆனால் பயிற்சி மருத்துவர்கள் சில நிபந்தனைகளை விதித்ததால் பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. இந்நிலையில், போராட்டம் நடைபெறும் இடத்துக்கே முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சென்றார். அங்கு மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களிடம் கூறியதாவது:

உங்களுடைய போராட்டத்துக்கு வணக்கம் செலுத்தவே இங்கு வந்துள்ளேன். நானும் மாணவர் இயக்கத்தில் பங்கேற்றவர்தான். எனது பதவி பெரிதல்ல உங்களு டைய குரல்தான் வலிமையானது என்பது எனக்குத் தெரியும்.

நேற்றிரவு முழுவதும் பெய்த மழையில் நனைந்து நீங்கள் அவதிப்பட்டீர்கள். இதனை எண்ணி உறங்க முடியாமல் தவித்தேன். உங்களுடைய கோரிக்கைகளை உற்று நோக்குவேன். நான் தன்னந்தனியாக அரசாங்கத்தை நடத்தவில்லை. தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் நான் கலந்து பேசுவேன்.

குற்றவாளிகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். உங்கள் சார்பாக சிபிஐ விசாரணையை மேலும் வேகப்படுத்த வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுடைய கோரிக்கைகளை ஏற்க எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நீங்கள் என்னை நம்பினால், வந்து என்னுடன் பேசுங்கள்,உங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி மடுக்க காத்திருக்கிறேன்.

பணிக்குத் திரும்புங்கள். எத்தகைய அநீதியும் நிகழ்ந்துவிடாது என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ஒவ்வொரு மருத்துவமனையிலும் மூத்த மற்றும் இளைய மருத்துவர்கள் அடங்கிய கமிட்டியை நிறுவுவேன். எனது நண்பர்கள் என்கிற பாரபட்சம் பாராமல் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்குள் கலந்துபேசி தயவு செய்து வேலைக்குத் திரும்புங்கள். உங்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கமாட்டேன். உத்தர பிரதேசத்தில் செய்ததுபோல் நான் ஒருநாளும் செய்ய மாட்டேன். உங்களுடைய பணியை பற்றி நன்கறிவேன். உங்களுடைய முக்கியத்துவமும் நன்கறிவேன். இந்த சிக்கலுக்கு தீர்வுகாண இதுவே எனது கடைசி முயற்சி.என் மீது நம்பிக்கை வைத்தால் உங்களுடைய புகாருக்கு செவிமடுப்பேன்.

உச்ச நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். உங்களை கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. உங்கள் அக்காவாக வேண்டுகோள் விடுக்கவே வந்திருக்கிறேனே தவிர மாநில முதல்வராக அல்ல. கரிசனத்துடன் உங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

இதுகுறித்து பயிற்சி மருத்துவர்கள் கூறும்போது, ‘‘முதல்வர் மம்தா இங்கு வந்து பேசியது எங்களுக்கு மகிழ்ச்சிதான். பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், அரசுடனான பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்’’ என்றனர்.

இருப்பினும் நேரடி ஒளிபரப்புக்கு அரசு தரப்பு மறுப்பு தெரிவித்தது. மேலும், கூட்டத்தின் பதிவு செய்யப்பட வீடியோ மருத்துவர்களிடம் வழங்கப்படும் என தெரிவித்தது. சனிக்கிழமை இரவு முதல்வர் மம்தாவின் வீடு வரை பேச்சுவார்த்தைக்காக சென்ற நிலையில் நேரடி ஒளிபரப்பு கோரிக்கை ஏற்கபடாத சூழலில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. கொட்டும் மழையில் முதல்வரின் வீட்டுக்கு வெளியே பயிற்சி மருத்துவர்களும், அவர்களின் வருகைக்கு முதல்வர் மம்தாவும் காத்திருந்தனர்.

இதனிடையே பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வு, கொலை வழக்கில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் காவல் அதிகாரி ஒருவரை சிபிஐ கைது செய்தது. தடயங்களை அழித்தது, வழக்கு பதிவில் தாமதம் முதலியவை அவர்கள் மீதான குற்றச்சாட்டாக உள்ளது.

x