காஷ்மீரில் 3 இடங்களில் மோதல்: 5 தீவிரவாதிகள் உயிரிழப்பு - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், பட்டான் பகுதியில் உள்ள சாக் டாபர் க்ரீரி கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் ராணுவ வீரர்களும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலையில் அங்கு 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுபோல் கதுவா மாவட்டத்தில் மற்றொரு மோதல் சம்பவத்தில் 2 தீவிரவாதிகளை ராணுவத்தின் ரைசிங் ஸ்டார் படையினர் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர். சம்பவ இடத்திலிருந்து பெருமளவு ஆயுதங்களை கைப்பற்றினர்.

இதற்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம்,நைட்காம் பகுதியில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது. உயரமான மலைப் பகுதியில் நடந்த இந்த மோதலில் 4 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

இவர்களில் விபன் குமார் என்ற அதிகாரியும் அர்விந்த் சிங் என்ற வீரரும் பின்னர் உயிரிழந்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஜம்மு காஷ்மீர் பயணத்துக்கு முன் இந்த மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். இதையொட்டி இரட்டை மாவட்டங்களான தோடா மற்றும் கிஷ்துவாரில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 42 ஆண்டுகளில் பிரதமர் ஒருவர் தோடா சென்றது இதுவே முதல் முறையாகும்

x