நகைக் கடன் நடைமுறைகளை மறு மதிப்பீடு செய்க... வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!


நகைக் கடன்

நகைக் கடன் நடைமுறைகளை மறு மதிப்பீடு செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

நகைக்கடன்

தங்க நகை கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. நகைக் கடன்கள் எண்ணிக்கை உயர்வானது 17 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் விலை உயர்வானது 16.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஜனவரி 26-ம் தேதி நிலவரப்படி, தங்க நகைகள் மீதான கடனானது ரூ.1.01 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் 2022 ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு வழங்கப்பட்ட தங்க நகைக் கடன் கணக்குகளை மறு ஆய்வு செய்யுமாறு நிதி அமைச்சகத்தின் ஒரு பிரிவான நிதிச் சேவைகள் துறை (டிஎஃப்எஸ்) அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக டிஎஃப்எஸ் செயலாளர் விவேக் ஜோஷி கூறுகையில், “ஒவ்வொரு தங்க நகைக் கடன் கணக்கையும் ஆய்வு செய்யுமாறு வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்பிஐ, ஐஐஎஃப்எல் பைனான்ஸ்

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கடன்களுடன் பிணைக்கப்பட்டுள்ள தங்க சொத்துகளின் மதிப்பீடு குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புக்கு உட்பட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், வரும் ஆண்டில் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.70 ஆயிரம் என்ற வரலாற்று உச்சத்தை எட்டும் என அகில இந்திய ரத்தினம் மற்றும் நகை உள்நாட்டு கவுன்சில் (ஜிஜேசி) கணித்துள்ளது.

ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் தங்கக் கடன் கணக்கில் 67 சதவீதத்தில் தங்கக் கடன் மதிப்பு விகித விலகல் (வேல்யூ ரேஷியோ டீவியேஷன்) இருப்பதை சமீபத்திய தணிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது.

இதையடுத்து, ஐஐஎஃப்எல் பைனான்ஸ் எந்தவொரு தங்கக் கடனை வழங்கவோ, பாதுகாப்புப் பத்திரமாக்கவோ அல்லது ஒதுக்கவோ இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 4-ம் தேதி தடை விதித்தது.

பொதுத் துறை வங்கிகள்

கடந்த 2023 மார்ச் 31 நிலவரப்படி ஐஐஎஃப்எல் பைனான்ஸ் நிதி நிலை குறித்து ரிசர்வ் வங்கியால் ஆய்வு நடத்தப்பட்டது. இது நிறுவனத்தின் தங்கக் கடன் கணக்குகள் மீது கவலைகளை உருவாக்கியுள்ளது. இச்சூழலில் தங்க நகைக் கடன்கள் நடைமுறைகள் குறித்து மறு மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x