22,217 தேர்தல் பத்திரங்களில் 22,030 பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன... உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பதில்!


தேர்தல் நன்கொடை பத்திர வழக்கு

தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 22,127 பத்திரங்களில் 22,030 பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ தேர்தல் நன்கொடை பத்திரம்

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திரம் திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதன்படி, எஸ்பிஐ வங்கியில் ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறி, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ம் தேதி இத்திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், இதுவரை வழங்கிய தேர்தல் பத்திரங்கள் பட்டியல், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள் ஆகிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 11-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் தகவலை வழங்க 4 மாத கால அவகாசம் வேண்டும் என எஸ்பிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே நீதிமன்ற உத்தரவுப்படி, விவரங்களை தாக்கல் செய்யாத எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடை

இந்த வழக்குகளை கடந்த 11-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், கால அவகாசம் கோரும் எஸ்பிஐ-யின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், 12-ம் தேதி மாலை 5 மணிக்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து எஸ்பிஐ வங்கி, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் நேற்று சமர்ப்பித்தது. மேலும், இது குறித்த விவரங்களை எஸ்பிஐ தலைமை நிர்வாக இயக்குநர் தினேஷ் காரா, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல செய்தார்.

தேர்தல் நன்கொடை பத்திரம் வழக்கு

அதில், கடந்த 2019 ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 15 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 22,217 தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், அவற்றில் 22,030 பத்திரங்கள் மீண்டும் பணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாத்திரங்களை வாங்கியவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட மற்ற விவரங்களும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் டிஜிட்டல் ஆவணமாகவும், அதற்குரிய கடவுச்சொல்லும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

x