சிஏஏ-வுக்கு இணையதளம் தொடங்கியது மத்திய அரசு... மொபைல் ஆப்பும் வருகிறது!


மத்திய அரசு துவங்கியுள்ள இந்திய குடியுரிமை விண்ணப்ப இணையதளம்

சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து 3 நாடுகளிலிருந்து இந்தியா வந்த 6 சிறுபான்மை சமூகத்தினர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்

கடந்த 2019-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. சிஏஏ சட்டமானது, கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னதாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்ட இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வழி வகை செய்கிறது.

இந்நிலையில் மத்திய அரசு குறிப்பிட்ட 3 நாடுகளிலிருந்து வந்த 6 சிறுபான்மை சமூகத்தினர் இந்திய குடியுரிமை பெற புதிதாக இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’சிஏஏ 2019-ன் கீழ் குடியுரிமை திருத்த சட்டம்-2024 அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சிஏஏ 2019 -ன் கீழ் தகுதியுள்ள நபர்கள் https://indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

எளிதாக விண்ணப்பிப்பதற்காக 'சிஏஏ 2019' என்ற மொபைல் ஆப்பும் விரைவில் தொடங்கப்படும் என உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிஏஏ-வுக்கான ஆன்லைன் போர்டல் விண்ணப்பதாரர்கள், 'லாகின்'-ஐ உருவாக்கி, பின்னர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்பங்க ளுடன் அரசு கூறியுள்ள ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக, விண்ணப்பதாரர்கள் 2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்குள் நுழைந்ததற்கான சான்று ஆவணங்களான விசா, இமிகிரேஷன் ஸ்டாம்ப், வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரியிடமிருந்து (எஃப்ஆர்ஆர்ஓ) பெற்ற பதிவுச் சான்றிதழ் அல்லது இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கணக்கீட்டாளர்கள் வழங்கிய சீட்டு, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உரிமம் அல்லது சான்றிதழ் அல்லது அனுமதி ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

ஓட்டுநர் உரிமம், ஆதார் எண், ரேஷன் கார்டு அல்லது இந்தியாவில் வழங்கப்பட்ட திருமண சான்றிதழ் போன்றவற்றையும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x