தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் 2 ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ அறிவிப்பு


பாலசூர்: தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் 2 ஏவுகணைகள் தொடர்ந்து 2 நாட்களாக வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது.

தரையிலிருந்து வான் இலக்கைதாக்கும் குறுகிய தூர ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்தது. இந்த ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலத்தின் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.

இதற்காக அப்பகுதியில் 2.5 கி.மீ. சுற்றளவு பகுதியில் வசிக்கும் 6 கிராமங்களைச் சேர்ந்த 3,100பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். தரையிலிருந்து செங்குத்தாக ஏவப்பட்ட ஏவுகணைகள், வானில் குறைந்த உயரத்தில் வேகமாக வந்த இலக்குகளை வெற்றிகரமாக இடைமறித்து தாக்கி அழித்தன. இதன் மூலம் இந்த ஏவுகணையின் துல்லியம் மற்றும் திறன் உறுதி செய்யப்பட்டதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. நவீனதொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த குறுகிய தூர ஏவுகணைபாதுகாப்பு படைகளின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ராஜ்நாத் சிங் பாராட்டு: இந்த வெற்றிகர சோதனைக்காக, டிஆர்டிஓ மற்றும் கடற்படை குழுவினரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்ட குழுவினரை டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமிர் வி.காமத்தும் பாராட்டினார்.

x