மக்களவைத் தேர்தலில் ஹரியாணாவில் உள்ள 10 தொகுதிகளிலும் பாஜகவே போட்டியிட முடிவு செய்ததால், கூட்டணியில் உள்ள ஜேஜேபி கட்சி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவே போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறவும், மாநில பாஜக அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெறவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக, அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் எம்எல்ஏ-க்களின் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார்.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 41 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 30 உறுப்பினர்களும், ஜேஜேபி-க்கு 10 உறுப்பினர்களும் உள்ளனர். இது தவிர 7 சுயேச்சைகளும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) மற்றும் ஹரியாணா லோகித் கட்சிக்கு தலா ஒரு எம்எல்ஏ-வும் உள்ளனர்.
இந்நிலையில், ஜேஜபி ஆதரவை வாபஸ் பெறும் என்பதால் இன்று மதியம், மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவை ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளது. அடுத்த நடவடிக்கையாக அங்கு சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் மீண்டும் புதிதாக ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, மற்றும் தருண் சுக் ஆகியோரை பார்வையாளர்களாக ஹரியாணாவுக்கு பாஜக அனுப்பியுள்ளது. பாஜக – ஜேஜேபி கூட்டணி ஆட்சியில் ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் தத்தா துணை முதல்வராக உள்ளது குறிப்பிடத்தக்கது.