"எனது மன உறுதி 100 மடங்கு வளர்ந்துவிட்டது" - சிறையிலிருந்து வெளியேறிய கேஜ்ரிவால் முழக்கம்!


டெல்லி: கலால் கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, திகார் சிறையிலிருந்து 6 மாதங்கள் சிறைவாசம் முடிந்து வெளியேறிய டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “எனது மன உறுதி 100 மடங்கு வளர்ந்துவிட்டது” என்று கூறினார்.

ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையின் வாயில் இன்று கொட்டும் மழையிலும் திரண்டிருந்து வரவேற்றனர். கேஜ்ரிவாலை வரவேற்க அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி அமைச்சர் அதிஷி, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் திரண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய கேஜ்ரிவால், “நீங்கள் அனைவரும் இந்த மழையிலும் எனக்காக அதிக அளவில் வந்துள்ளீர்கள். என் வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்ததற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் நிறைய போராட்டங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் நான் சத்தியத்தின் பாதையில் நடந்ததால் கடவுள் என்னுடன் இருக்கிறார்.

பாஜக என்னை சிறையில் அடைத்து, எனது மன உறுதியை உடைத்து விடலாம் என்று நினைத்தார்கள். நான் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, எனது மன உறுதியும், வலிமையும் 100 மடங்கு அதிகமாகிவிட்டது. நான் கடவுள் காட்டிய பாதையில் செல்வேன். தேசத்தை பிளவுபடுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன்” என்று கூறினார்

x