அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் பெயரை ‘ஸ்ரீ விஜயபுரம்’ என மாற்றிய மத்திய அரசு - சோழப்பேரரசுக்கு புகழாரம்!


புதுடெல்லி: அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீவிஜயபுரம் என மாற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். போர்ட்பிளேர் சோழப் பேரரசு காலத்தில் கடற்படை தளமாக திகழ்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால், காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரின் பெயரை 'ஸ்ரீவிஜயபுரம்' என மாற்ற முடிவு செய்துள்ளோம்.

போர்ட் பிளேயர் என்ற முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தது. ஸ்ரீ விஜய புரம் நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்களிப்பையும் குறிக்கிறது. நமது சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக விளங்கிய இந்த தீவுப் பகுதி, இன்று நமது வளர்ச்சிக்கு முக்கியமான தளமாக விளங்குகிறது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நமது மூவர்ணக் கொடியை முதன்முறையாக ஏற்றிய இடம் அந்தமான் நிக்கோபார் தீவுகள். வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுதந்திர தேசத்திற்காக போராடி செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட இடமும் இதுதான்’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

x