மருத்துவ சேவை கிடைக்காமல் உயிரிழந்த 29 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம்: மம்தா அறிவிப்பு


கொல்கத்தா: பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 29 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 9 முதல் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று போராடும் ஜூனியர் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி 2 மணி நேரம் காத்திருந்தார். ஆனால் இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய வலியுறுத்தி அவர்கள் நேற்று பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், ‘ஜூனியர் மருத்துவர்களின் நீண்டகால போராட்டம் காரணமாக, சுகாதார சேவைகளில் ஏற்பட்ட இடையூறால், விலைமதிப்பற்ற 29 உயிர்களை நாம் இழந்திருப்பது வருத்தமும் துரதிர்ஷ்டவசமானதும் ஆகும். உயிரிழந்த குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், இறந்த ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக மாநில அரசு வழங்கும்” என்று அவர் கூறினார்.

மேலும், ‘ஜூனியர் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன். அவர்களுக்காக மூன்று நாட்கள் காத்திருந்தேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் ஏற்காதபோதும், எனது உயர் அதிகாரிகளுடன் மூன்று நாட்கள் காத்திருந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மருத்துவர்கள் பணியில் சேர வேண்டும்’ என்று அவர் கூறினார்.

.

x