அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: உற்சாகத்தில் ஆம் ஆத்மி கட்சி!


டெல்லி: கலால் கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் மக்களவைத் தேர்தலையொட்டி உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து ஜூன் 26-ம் தேதி சிபிஐ அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தது.

இந்த சூழலில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜுலை 12-ம் தேதி கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்ததால் அவர் ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் நீடித்தது.

இந்த கைதை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் கேஜ்ரிவால் 176 நாட்களுக்கு பிறகு விடுதலை ஆகிறார்.

நீண்ட காலமாக சிறையில் இருப்பது அநியாயமாக சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது. அதே நேரத்தில் கேஜ்ரிவாலின் கைது சட்டப்பூர்வமானது, எந்த விதிமுறை மீறல்களும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவால் பிணையத் தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், இந்த வழக்கைப் பற்றி பகிரங்கமாக எந்த கருத்தும் வெளியில் பேசக் கூடாது, விசாரணை நீதிமன்றத்தின் அனைத்து விசாரணைகளுக்கும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.


x