தமிழக ஆளுநர் மாளிகை சலசலப்பு முதல் புயல் அப்டேட் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> சென்னை ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: திருவள்ளுவர் திருநாள் விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் இடம் பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

> சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில், அந்த மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

> முல்லைப் பெரியாறு விவகாரம் - இபிஎஸ் கண்டனம்: “உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணிக் கட்சி என்று பாராமல், கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

> பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலச்சரிவு: தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

> ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் அரசுக்கு ராமதாஸ் கேள்வி: கிருஷ்ணகிரியில் ஒரு இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளைத் தடுக்க அரசு என்ன செய்யப் போகிறது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

> பேரனுக்கு உதவியதாக தேவதவுடா மீது சித்தராமையா குற்றச்சாட்டு: பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தனது பேரனும், மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி தப்பிச் செல்ல முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா உதவி உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

> வங்கதேச எம்.பி. கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்: கொல்கத்தாவில் கொல்லப்பட்டதாக நம்பப்படும் வங்கதேசத்தின் எம்.பி., அன்வருல் அஷிமின் தோல்கள் உரிக்கப்பட்டு, உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு,பல பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு நகர் முழுவதும் வீசப்பட்டதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

> எந்த ஆஸ்திரேலிய வீரரையும் அணுகவில்லை - ஜெய் ஷா: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக எந்த ஆஸ்திரேலிய வீரரையும் அணுகவில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

> ‘எனது மகனை காப்பாற்றுங்கள்’: புனே சொகுசு கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 வயது சிறுவனின் தாய், தனது மகனை காப்பாற்றும் படி போலீஸாரிடம் வேண்டு கோள்விடுத்துள்ளார். தனது மகன் எப்படி தப்பினார் என்று அவர் பெருமை பேசுவதாக வெளியான வீடியோ வைரலானதை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

> வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (மே 24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெற்று வங்கதேசத்தை நோக்கி நகரக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

இப்போது வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்போது தமிழகத்துக்கான மழை வாய்ப்பு படிப்படியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மழைப் பொழிவு குறையத் தொடங்கிய நிலையில், இந்தப் புயல் வலுப்பெற பெற மழை முற்றிலுமாக நீங்கும்.

இப்போதைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது. கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

x