ம.பி.யில் 2 ராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல்: தோழியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது


இந்தூர்: மத்திய பிரதேசம் இந்தூரில் ராணுவ அதிகாரிகளை தாக்கி விட்டு,துப்பாக்கி முனையில் தோழியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தூர் அருகில் உள்ள மோவ் கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் இரு இளம் ராணுவ அதிகாரிகள் தங்களின் இரு தோழிகளுடன் கடந்த செவ்வாய் மாலை காரில் வெளியே சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில், இரு இளம் ராணுவ வீரர்களை தாக்கி விட்டு அவர்களிடமிருந்து பணம் மற்றும் உடைமைகளைப் பறித்துக் கொண்டனர்.

நால்வரில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு பெண்ணை பணயம் வைத்துக்கொண்டு ரூ.10 லட்சம் எடுத்துவந்து கொடுத்தால் அவர்களை விடுவிப்பதாக மிரட்டியுள்ளனர். இந்நிலையில், மீதமிருந்த ஒரு ராணுவ அதிகாரியும் ஒரு பெண்ணும் செய்வதறியாமல் அதிர்ச்சி அடைந்தனர். விடுவிக்கப்பட்ட ராணுவ அதிகாரி விரைந்துசென்று உயர் ராணுவ அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை விவரித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் ராணுவ படையினர் வருவதை கண்டு குற்றவாளிகள் தப்பி ஓடினர்.பிறகு பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டார். அவருடன் சேர்த்துக் காயமடைந்த இரு ராணுவ அதிகாரிகளும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பிணையில் வைக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரி புகார் அளித்தார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வனப்பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

ராகுல் கண்டனம்: இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், "இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்திருப்பதை இது காட்டுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பாராமுகம் காட்டும் பாஜக அரசின் எதிர்மறை போக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து கண்ணை மூடிக்கொண்டு இன்னும் எத்தனை காலம் இருக்கப்போகிறோம் என்பது பற்றி சமூகமும் அரசும் தீவிரமாக சிந்தித்தாக வேண்டும்" என கூறியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், "மகளிர் பாதுகாப்பு குறித்து பிரதமர் உரக்க பேசுகிறார். ஆனால், சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட நாடெங்கிலும் உள்ள பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களின் காத்திருப்புக்கு முடிவுதான் எப்போது? தினந்தோறும் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வரை, எங்கேயுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியினர் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மட்டும் இல்லை,அனுதினம் அவர்களது மனவலிமையும் சுக்குநூறாக உடைக்கப்படுகிறது" என கூறியுள்ளார்

x