இன கலவரம் தொடர்ந்து நடைப்பெற்று வரும் மணிப்பூருக்கு ஒரு முறை வந்து அமைதியை மீட்டெடுக்குமாறு பிரதமர் மோடிக்கு பிரபல குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூரைச் சேர்ந்த எம்எம்ஏ என அழைக்கப்படும் கலப்பு தற்காப்புக்கலை குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரேனின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடியை, இன கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு ஒரு முறை வந்து அமைதியை மீட்டெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
'மேட்ரிக்ஸ் ஃபைட் நைட்' போட்டி ஒன்றில் பங்கேற்ற பிறகு, சுங்ரெங் கோரென் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சுங்ரெங் கோரென் கண்ணீர் மல்கியபடி, “இது எனது தாழ்மையான வேண்டுகோள். மணிப்பூரில் வன்முறை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது.
மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். பலர் நிவாரண முகாம்களில் உள்ளனர். இந்த நிவாரண முகாம்களில் உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. குழந்தைகளால் சரியாக படிக்க முடிவதில்லை. எதிர்காலம் நிச்சயமற்றதாகி உள்ளது. மோடிஜி அவர்களே, தயவுசெய்து மணிப்பூருக்கு ஒரு முறை வந்து மாநிலத்தில் அமைதியை மீட்டெடுங்கள்” என்று கூறியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தினர் கடந்த ஆண்டு மே மாதம் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தினர். அதில் ஏற்பட்ட வன்முறை தற்போது வரை தொடர்கிறது. அங்கு இதுவரை வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மணிப்பூரின் மக்கள் தொகையில் சுமார் 53 சதவீதம் மெய்டேய் சமூகத்தினராக உள்ளனர். குறிப்பாக இம்பால் பள்ளத்தாக்கில் இவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். மற்ற பழங்குடியினரான நாகாக்கள் மற்றும் குக்கிகள் 40 சதவீதமாக உள்ளனர்.
மணிப்பூரில் பழங்குடியினரிடையே வன்முறை ஏற்பட்ட பிறகு அம்மாநிலத்துக்கு பிரதமர் மோடி ஒரு முறை கூட செல்லவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரேன், பிரதமர் மோடியை தங்கள் மாநிலத்துக்கு வருமாறு கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
தத்துவமேதை சாணக்யரின் வம்சமா தோனி ?! வைரலாகும் ஆய்வு முடிவுகள்!
#Oscars2024 | 7 விருதுகளை வென்று மாஸ் காட்டிய ‘ஓப்பன்ஹெய்மர்’!