லாலு பிரசாத் யாதவுக்கு உடல் நலக்குறைவு: மும்பை மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை


மும்பை: ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள ஆசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் செப்டம்பர் 10ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு, நேற்று ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது. 76 வயதான பிஹார் முன்னாள் முதல்வர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014 ம் ஆண்டில், லாலு பிரசாத் யாதவுக்கு ஆசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் ஆர்டிக் வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் அதன்பின்னர் 2018 மற்றும் 2023 இல் இந்த மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார்.

தற்போது லாலு பிரசாத் யாதவ் மீண்டும் செப்டம்பர் 10, 2024 அன்று ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்காக ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் மருத்துவர் சந்தோஷ் டோரா மற்றும் டாக்டர் திலக் சுவர்ணா ஆகியோரால் அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, 2022ம் ஆண்டில் சிங்கப்பூர் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது மகள் ரோஹினி ஆச்சார்யா லாலுவுக்கு சிறுநீரகத்தைத் தானம் செய்தார்.

x