போராடும் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தையில் மம்தா பானர்ஜி கலந்து கொள்வார்: மேற்கு வங்க அரசு அழைப்பு


கொல்கத்தா: ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து 34 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஜூனியர் மருத்துவர்களை மேற்கு வங்க அரசு இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்வார் என தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த் தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சம்பந்தப்பட்ட மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அரசு எப்போதும் தயாராக உள்ளது. மாலை 5 மணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜியை அவரது வீட்டில் சந்திக்க 15 பேருக்கு கொண்ட தூதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான கோரிக்கையை அரசு ஏற்காது என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். இருப்பினும் வெளிப்படைத்தன்மையை பராமரிக்க பேச்சுவார்த்தை பதிவு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் கோரிக்கையை தொடர்ந்து மூத்த மருத்துவர்கள் பணிக்குத் திரும்பிய போதிலும், ஜூனியர் மருத்துவர்கள் பல நாட்களாக மாநில சுகாதாரத் துறை தலைமையகத்திற்கு வெளியே உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தங்களின் பிரச்சினைகளை கேட்க அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவர்கள் விமர்சித்தனர்.

இதனையடுத்து செவ்வாயன்று பேச்சுவார்த்தைக்கான அழைப்பை மாநில சுகாதார செயலாளர் நாராயண் ஸ்வரூப் வெளியிட்டார். ஆனால் ஸ்வரூப்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கோரிக்கைகளில் ஒன்று என்பதால், அந்த அழைப்பு உடனடியாக நிராகரிக்கப்பட்டது. மீண்டும் தலைமைச் செயலாளர் பந்த் புதன்கிழமையன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் முதல்வர் பங்கேற்கவில்லை என்பதால் அந்த அழைப்பு நிராகரிக்கப்பட்டது.

முன்னதாக ஆர்.ஜி.கர் பயங்கரத்தை தானாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், வேலைநிறுத்தம் செய்யும் ஜூனியர் மருத்துவர்களை கையாள்வதற்கான பொறுப்பை மேற்கு வங்க அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.

x