‘ரீடிங் கிளாஸுக்கு குட்பை சொல்லலாம்’ என்ற கண் சொட்டு மருந்துக்கு தடை!


மும்பை: வெள்ளெழுத்து பிரச்சினையை எதிர்கொண்டு வருபவர்கள் தங்கள் நிறுவனத்தின் கண் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம் என மருந்து கம்பெனி கடந்த வாரம் தெரிவித்தது. இது சர்ச்சையான சூழலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சொட்டு மருந்துக்கு மத்திய மருந்துகள் நிபுணர் குழு (சிடிஎஸ்சிஓ) தடை விதித்துள்ளது.

40 வயதை கடந்தவர்கள் பெரும்பாலும் ‘பிரஸ்பயோபியா’ எனப்படும் வெள்ளெழுத்து பிரச்சினையை எதிர்கொள்வார்கள். இவர்களால் புத்தகம், செய்தித்தாள் போன்றவற்றை படிக்க இயலாது. அதற்கு ரீடிங் கிளாஸை பயன்படுத்துவார்கள். இந்தச் சூழலில் என்டாட் பார்மாடிகல்ஸ் என்ற மருந்து நிறுவனம், ‘பிரஸ்வியூ’ என்ற தங்களது கண் சொட்டு மருந்தை இந்த பிரச்சினைக்கு பயன்படுத்தலாம் என சொன்னது.

இந்தச் சொட்டு மருந்தை கண்ணில் ஊற்றினால் 15 நிமிடங்களில் வெள்ளெழுத்து பிரச்சினை சரியாகி விடும் என என்டாட் பார்மாடிகல்ஸ் தெரிவித்தது. அதன் பின்னர் ரீடிங் கிளாஸ் இன்றி இதன் பயனர்கள் படிக்கலாம் என தெரிவித்தது. இது சர்ச்சை ஆனது.

இதன் தொடர்ச்சியாக, பிரஸ்வியூ சொட்டு மருந்துக்கு அனுமதி வழங்கி இருந்த சிடிஎஸ்சிஓ, தற்போது தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் இந்த கண் சொட்டு மருந்தை மருந்து நிறுவனம் தயாரிக்க கூடாது என தெரிவித்துள்ளது. அதோடு சந்தைப்படுத்தவும் கூடாது என தெரிவித்துள்ளது.

மக்களை தவறாக வழி நடத்தும் வகையில் மருந்து நிறுவனம் இந்த சொட்டு மருந்தை புரோமோட் செய்தது இதற்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மக்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக சிடிஎஸ்சிஓ தெரிவித்துள்ளது.

x