சீனாவுடனான எல்லை பிரச்சினையை பிரதமர் மோடி சரியாக கையாளவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு 3 நாள் பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று வாஷிங்டனில் உள்ள நேஷனல் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஜனநாயகம் உடைந்து விட்டது என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். மகாராஷ்டிரா அரசு எங்களிடமிருந்து எடுக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். இந்தியா, சீனா இடையே எல்லைபிரச்சினை நீண்ட ஆண்டுகளாக உள்ளது. கடந்த 2020-ல் சீன ராணுவவீரர்கள் டெல்லி அளவுக்குப் பரப்பளவு கொண்ட ஒரு இடத்தை லடாக்கில் கைப்பற்றிக் கொண்டனர். இது ஒரு பேரிழப்பு.

இந்திய எல்லைப் பகுதியில் சீன துருப்புகள் இருப்பது கவலை அளிக்கிறது. சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை, பிரதமர் மோடி சரியாகக் கையாளவில்லை. 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் உள்ள ஒரு பகுதியை அண்டை நாடு ஆக்கிரமித்தால் அதற்கு அமெரிக்கா எப்படி நடந்துகொள்ளும்? எந்த அதிபரும் அந்தப் பிரச்சினையை அதை நன்றாக கையாண்டதாக சொல்லிவிட்டு தப்பிக்க முடியுமா? எனவே, சீனாவுடனான எல்லைப் பிரச்சினை விவகாரத்தில் அந்த நாட்டை, பிரதமர் மோடி சரியாக கையாளவில்லை என்றுதான் நான் சொல்வேன். இந்தியாவில் பிரதமர் மோடி, உள்நாட்டு பொருளாதார கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். மேலும் ஒரு சில பெரிய பணக்காரர்களுக்கு மட்டுமே தொழில்துறை வாய்ப்புகளை வழங்கி வருகிறார். இதனால் இந்திய தொழில்துறையானது ஒரு சில பெரிய பணக்காரர்களின் வசம் சென்றுவிடுகிறது. இதனால் நாட்டின் உற்பத்தி பாதிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்: பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அமெரிக்கஎம்.பி. இல்ஹான் உமரை சந்தித்துள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இவர் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் தீவிர முஸ்லிம் மதவாதி. சுதந்திர காஷ்மீர் உருவாக வேண்டும் என குரல் கொடுப்பவர். காங்கிரஸ் தற்போது வெளிப் படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.பாஜக செய்தி தொடர்பாளர் சேஷாத் பூனாவாலா வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தவர் இல்ஹான் உமர். வெளிநாட்டு பயணங்களில் எல்லாம், இந்தியாவுக்கு எதிரான சக்திகளை ராகுல் ஏன் சந்திக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

x