சந்திரனை நெருங்கியது சந்திரயான்3... இன்று தரையிரங்க தயாராகும் லேண்டர்!


நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் - 3 விண்கலத்திலிருந்து லேண்டர் இன்று தனியாக பிரிக்கப்படுகிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான் - 3 விண்கலம், ஜூலை, 14ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

புவி வட்டப் பாதையில் இருந்து, நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்த விண்கலம், நிலவை சுற்றி வந்தது. இதற்கிடையே சுற்றுப் பாதை தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இதுவரை, நான்கு முறை இந்த தொலைவு குறைக்கப்பட்ட நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி கட்ட துாரம் குறைப்பு முயற்சி நேற்று வெற்றிகரமாக நடந்தது.

சந்திரயான் 3 எடுத்த நிலவின் புகைப்படம்

இதையடுத்து, சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள, 'புரபல்ஷன் மாட்யூல்' எனப்படும் உந்து கலத்தில் இருந்து, 'லேண்டர்' எனப்படும் நிலவில் தரையிறங்க உள்ள சாதனம் இன்று பிரிக்கப்பட உள்ளது.

அதன்பின், சந்திரயான் - 3 விண்கலம், நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்யும். அதே நேரத்தில், லேண்டர் சாதனத்தை, நிலவின் தென் துருவத்தில், 23ம் தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லேண்டர் சாதனத்துக்குள், 'ரோவர்' எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வாகனம் இடம் பெற்றுள்ளது. லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய உடன், ரோவர் வாகனம், நிலவின் மேற்பகுதியில் சுற்றி வந்து ஆய்வு செய்யும். இதுவரை அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக, இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இந்திய விண்கலம் நிலவில் லேண்டர் கால் பதிக்கும் நேரத்தை இந்திய மக்கள் அனைவரும் வெகு எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்திய விஞ்ஞானிகளின் வெற்றி சரித்திரத்தைக் கண்டு உலகம் வியக்கும் தருணம் கைகூடும் என்ற நம்பிக்கையில் இந்திய மக்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

x