ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் திடீர் துப்பாக்கிச் சூடு: பிஎஸ்எஃப் வீரர் காயம்


ஜம்மு: இன்று அதிகாலை ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதில் பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை 2.35 மணியளவில், எல்லைக்கு அப்பால் உள்ள அக்னூர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் துருப்புகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பிஎஸ்எஃப் தகுந்த பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பிஎஸ்எஃப் வீரர் காயம் அடைந்தார். ஆனாலும், பாகிஸ்தான் தரப்பில் ஏதேனும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதா என உடனடி தகவல் இல்லை.

பாகிஸ்தானின் தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை புதுப்பித்த 2021ம் ஆண்டிலிருந்து போர்நிறுத்த மீறல் சம்பவங்கள் மிகவும் குறைவாக இருந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ராம்கர் செக்டாரில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் படைகளின் சமீபத்திய போர்நிறுத்த மீறல் நிகழ்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்ட தேர்தல்களில் முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 18ம் தேதியும், இரண்டாவது கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதியும் நடைபெறுகிறது. அக்டோபர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

x