மணிப்பூரில் மீண்டும் கலவரம்: 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம், பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடு


இம்பால்: மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி, பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் இணைய சேவையை முடக்குவதாக நேற்று மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

மேலும், பல்வேறு பகுதிகளில் ஊரடங்குக் கட்டுப்பாடும் போடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார்கல்வி நிறுவனங்களை 2 நாட்களுக்கு மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக விரோதிகள் சமூக வலைதளங்கள் மூலம் வெறுப்பைத் தூண்டும் புகைப்படங்கள், வீடியோக்களை பரப்பி பெரும் கலவரத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள நிலையில்இணைய சேவை முடக்கப்படுவதாக மணிப்பூர் மாநில உள்துறை தெரிவித்துள்ளது. மணிப்பூரில்குக்கி மற்று மைத்தேயி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மிகப் பெரிய கலவரம் வெடித்தது. 200-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கடந்த சில மாதங்களாக அங்கு அமைதி நிலவி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவ்விரு பிரிவினரிடையே மீண்டும் வன்முறை வெடித்தது. ட்ரோன், ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலைக் கண்டித்தும் மணிப்பூரில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த திங்கள்கிழமை மணிப்பூர் தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது தவுபால் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து தவுபாலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இம்பாலில்நேற்று பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையில், அவர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நிலையைச் சமாளிக்க முடியாத மாநில காவல்துறை தலைவர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை நீக்கக் கோரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மாவட்டங்களில் காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காலை 11 மணி முதல் இந்தஊரடங்கு கட்டுப்பாடு நடைமுறைக்கு வருவதாகவும் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் ஊரடங்கு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரம், மின்சாரம், ஊடகம், நீதிமன்றம்உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக் கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மூலம்வெறுப்புக் கருத்துகள் பரப்பப்படும் அபாயம் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் செப். 15-ம்தேதி வரையில் 5 நாட்களுக்குஇணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மணிப்பூரில் நடைபெற்ற மோதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

x