நாட்டின் முன்னேற்றத்துக்கு வலுவான சைபர் செக்யூரிட்டி கட்டமைப்பு அவசியம்: மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து


புதுடெல்லி: “நாட்டின் முன்னேற்றத்துக்கு வலுவான சைபர் செக்யூரிட்டி கட்டமைப்பு அவசியம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

உலக அளவில் டிஜிட்டல்மயம் வேகமாக நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், இணையவழி (சைபர்) குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஐ4சி அமைப்பை 2018-ம் ஆண்டு உருவாக்கியது. இதன் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “உலகில்நிகழும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் 46% இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் வலுவான சைபர் கட்டமைப்பு மிகமுக்கியமானது.

தற்போதைய காலகட்டத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்கு சைபர் பாதுகாப்பு அவசியம்.சைபர் குற்றங்களை தடுக்க அடுத்த5 ஆண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோக்களை தயார்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. சைபர்குற்றங்களுக்கு எல்லைகள் கிடையாது. எனவே அனைத்து நாடுகளும் இதில் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்” என்றார்.

x