போலி பாஸ்போர்ட் இணையதளங்களில் விண்ணப்பித்து ஏமாற வேண்டாம்: வெளியுறவு துறை அமைச்சகம் எச்சரிக்கை


சென்னை: மோசடி நபர்கள் உருவாக்கியுள்ள போலி பாஸ்போர்ட் இணையதளங்கள் மூலம், பொதுமக்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பது, புதுப்பிப்பது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் இணையவழியில் நடைபெறுகிறது.

இதை சாதகமாக்கிக் கொண்டு மோசடி நிறுவனங்கள் போலி இணையதளங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளன. இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களை கவரும் வகையில் பல்வேறு இணையதளங்கள் மற்றும் மொபைல்போன் செயலிகளை மோசடிகாரர்கள் உருவாக்கி உள்ளனர். இவற்றின் வழியாக விண்ணப்பதாரர்களின் தரவுகளை சேகரித்து முறைகேடுகளில் ஈடுபடுவதுடன், சேவைகளுக்கான சந்திப்பை உறுதிப்படுத்த அதிக கட்டணத்தை வசூலிப்பது உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோசடி கும்பல்கள் www.indiapassport.org; www.passportindiaportal.in; www.passport-seva.in; www.applypassport.org; www.passport-india போன்ற இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன.

எனவே, இதுபோன்ற இணையதளங்களில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் www.passportindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது mPassport Seva என்ற மொபைல்போன் செயலியை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x