நிதிஷ் குமாருடன் மீண்டும் கூட்டணியா? - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு பதில்


பாட்னா: பிஹார் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், நிதிஷ் குமாருடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ். "முதலமைச்சர் கையில் இப்போது எதுவும் இல்லை. அவர் இப்போது வெறும் முகமூடியாக இருக்கிறார். பாஜகவைச் சேர்ந்த ஒரு சிலரே ஆட்சியை நடத்துகிறார்கள். நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியுவுடன் மீண்டும் கூட்டணிக்கான வாய்ப்புகள் இல்லை. நாங்கள் அவருக்கு பல வாய்ப்புகளை கொடுத்துள்ளோம். நாங்கள் அவரிடம் செல்லவில்லை, அவர் இங்கு வந்தார். அவர் என் அம்மா (முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி) முன் கைகூப்பினார். அவர் விதானத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்” என்றார்.

மேலும், “நிதீஷ் குமாரை விட சிறந்தவர் யார் என மக்கள் முடிவு செய்வார்கள். நான் உழைத்துள்ளேன், எனக்கு கிடைத்த எந்தப் பொறுப்பையும், குறுகிய காலத்திற்கேனும் நிறைவேற்றினேன். பீகார் மக்கள் எங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை எதுவாக இருந்தாலும், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுவோம்.

நான் துணை முதல்வராக இருந்தேன், எனக்கு சிஸ்டம் தெரியும், அரசு எப்படி செயல்படுகிறது என்று பார்த்தேன். வாய்ப்பு கிடைத்தால் பிஹார் கண்டிப்பாக மாறும். நாம் இளமையாக இருக்கிறோம், நவீனமாக இருக்கிறோம், புதிய பீகாரை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம்” என்றார்.

கடந்த இருபது ஆண்டுகளாக அடிக்கடி கூட்டணிகளை மாற்றியவர் நிதிஷ் குமார். 2015 பிஹார் தேர்தலில் ஜேடியு மற்றும் ஆர்ஜேடி கூட்டணி அமைத்து அமோக வெற்றியைப் பெற்றபோது, ​​நிதிஷ் குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கூட்டணியை மாற்றி பாஜகவுடன் இணைந்து தனது முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். பின்னர் 2022ல் பாஜகவை கைவிட்டு மீண்டும் ஆர்ஜேடி உடனான கூட்டணிக்கு திரும்பினார். இந்த ஜனவரியில், அவர் மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவினார்.

x