புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்றுமாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர்களின் போராட்டத்தால் மேற்கு வங்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசுசார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார்.
இதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறும்போது, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அதுவரை அவர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது. அவர்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து புகார்களும் கவனத்தில் கொள்ளப்படும். ஆனால் தொடர்ந்து பணியை புறக்கணித்து வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சேவை செய்ய விரும்பும் சமூகத்தின் கவலைகளை அவர்கள் கவனிக்காமல் இருக்க முடியாது.
ஆட்சியர்களும், காவல் துறைஅதிகாரிகளும் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.ஆண் மற்றும் பெண் மருத்துவர்களுக்கு தனித்தனி ஓய்வறை, கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல்உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என்றார்.
இந்த வழக்கில் மாநில அரசின் அறிக்கையில் ஒரு முக்கிய ஆவணம் பற்றி குறிப்பிடாததற்கு மேற்கு வங்க அரசுக்கு நீதிபதி ஜே.பி. பர்திவாலா கண்டம் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜே.பி. பர்திவாலாகூறுகையில், “இந்த வழக்கில் பயிற்சி மருத்துவரான ஒரு தனிநபரின் பிரேத பரிசோதனை அறிக்கையுடன் வழங்கப்படும் சலான் குறித்து அரசின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு மேற்கு வங்க அரசு நாளை (இன்று) விளக்கம் அளிக்க வேண்டும். அந்தஆவணம் காணவில்லை என்றால். இது ஏன் நிகழ்ந்தது என்பதை விளக்க வேண்டும்” என்றார்.
அப்போது அந்த ஆவணம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும் என வழக்கறிஞர் கபில் சிபல் குறிப்பிட்டார்.
இதையடுத்து பெண் மருத்துவர் கொலை வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வரும் 17-ம் தேதி புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.