புதுடெல்லி: ரூ. 2,000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கும் நடைமுறையை அமல்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
இன்று 54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைக்கு இப்போதைக்கு 18% வரி இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரிவிதிக்க வேண்டும் என்ற முன்மொழிவு குறித்து மேலும் விரிவாக ஆலோசிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் நிர்ணயக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.
இந்த கூட்டத்தில், ரூ. 2,000 வரையில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்தால் சிறிய அளவில் பரிவர்த்தனை செய்யும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உறுப்பினர்கள் கூறியதால், இறுதி முடிவு எடுக்காமல் பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளுக்காக நிர்ணயக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை விலக்குவது குறித்து மத்திய அமைச்சகத்திடம் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இதேபோல் மத கரணங்களுக்காக இயக்கப்படும் ஹெலிகாப்டர்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.