மகாராஷ்டிரா ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு, 56 பேர் படுகாயம்


தானே: மகாராஷ்டிராவின் டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் நேற்று வெடித்துச் சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் தொழிற்சாலையைச் சுற்றிலும் கரும்புகை சூழ்ந்தது. அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் தீ பரவத் தொடங்கியது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்,56 பேர் படுகாயமடைந்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மத்தியஅமைச்சர் உதய் சமந்த் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். ஏற்கெனவே டோம்பிவிலி பகுதியில் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சிலர்சமூக ஊடகத்தில் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

விபத்து குறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, “டோம்பிவிலியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் விபத்து துயரகரமானது. விபத்து நிகழ்ந்தபோது தொழிற்சாலைக்குள் சிக்கியிருந்த 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தானே மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசியதில் அவரும் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தார். தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்பு வீரர்களும் தீயணைக்க இடைவிடாது களத்தில் போராடி வருகின்றனர். காயமடைந்தோர் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.

x