'உள்ளத்தை அள்ளித்தா' பட கவுண்டமணி பாணியில் கம்பம் பேருந்து பயணிகளிடம் நடத்துநர் உடையுடன் டிக்கெட் வசூலில் ஈடுபட்ட வாலிபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம், கம்பம் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் அரசு பேருந்து நடத்துநர் சீருடை அணிந்த வாலிபர் ஒருவர், கையில் நடத்துநர் பேக்குடன் பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து அதற்கான பணத்தினை வசூலித்துள்ளார்.
இதனைக் கண்ட அந்த பேருந்தின் உண்மையான நடத்துநர், சீருடையில் டிக்கெட் வசூல் செய்த அந்த நபரை பிடித்து பேருந்து நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களிடம் அந்த போலி நடத்துநர் ஒப்படைக்கப்பட்டார்.
போலீஸார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருநெல்வேலியை சேர்ந்த வேடியப்பன் என்பதும், அவர் போலியான பேருந்து டிக்கெட்டுகள் மற்றும் போலியான நடத்துநர் அடையாள அட்டை வைத்துக்கொண்டு பயணிகளிடம் ஏமாற்றி டிக்கெட் பணம் வசூலித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கவுண்டமணி நடத்துநர் வேஷமிட்டு பயணிகளிடம் பணத்தை வசூலித்து கொண்டு ஓடுவது போல கம்பம் பேருந்து பயணிகளிடம் போலி நடத்துநர் வசூலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.