புதுடெல்லி: வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் (எம்பாக்ஸ்) பாதிப்பு ஏற்பட்டுள்ளது முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
குரங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரிமாதம் ஏற்பட்டது. தற்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குரங்குகாய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் இதுவரை220 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து குரங்கு காய்ச்சலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. இந்நிலையில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு நாட்டிலிருந்து இந்தியா வந்த ஒருவருக்கு, குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட் டுள்ளார். சிகிச்சை பெறும் அந்த நபர் நலமுடன் இருக்கிறார்.
இதனால் நோய் பரவல் அபாயம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குரங்கு காய்ச்சல் பாதிப்புடன் இந்தியா வரும் பயணிகளை பரிசோதித்து தனிமைப்படுத்த தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார சேவைகள்தலைமை இயக்குநர் அதுல் கோயல் கூறுகையில், ‘‘குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சலுடன், உடலில் கொப்புளங்கள் ஏற்படும். இந்த பாதிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை இருக்கம். இது காற்று மூலம் பரவாது. குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவருடன் பாதுகாப்பற்ற முறையில் உடல் ரீதியான தொடர்பு,நோயாளி பயன்படுத்திய பொருட்களை தொடுவது போன்றவற்றால் மட்டுமே இந்நோய் பரவும். நோய்பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவது சிறந்தது. குரங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனியான மருந்துகள் இல்லை. வைரஸ் தடுப்பு மருந்துகள் மூலமே சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஆனால், குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி மருந்துகள் உள்ளன’’ என்றார்.