டெல்லி சேவைகள் மசோதா மீதான காரசாரமான விவாதத்தின் போது, மாநிலங்களவையில் நடத்தையை மீறியதற்காக திரிணமூல் எம்.பி டெரெக் ஓ பிரையன் கூட்டத்தொடர் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரெக் ஓ பிரையன், "கட்டுப்பாடற்ற நடத்தை மற்றும் சபை தலைவரின் வழிகாட்டுதல்களை மதிக்காததற்காக" மாநிலங்களவையில் இருந்து மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தங்கார் இன்று அறிவித்தார்.
டெல்லி சேவைகள் மசோதா மீதான சூடான விவாதத்தின் போது விளம்பரம் பெறுவதற்காக டெரெக் ஓ பிரையன் சபையில் நாடகமாடியதாக தங்கார் குற்றம் சாட்டினார். டெல்லி மசோதா மீது பிரையன் ஆவேசமாக கருத்து தெரிவித்தார். இதனையடுத்து தங்கார், "இது உங்கள் பழக்கமாகிவிட்டது. விளம்பர உத்தியாக இதை செய்கிறீர்கள். உங்கள் நடத்தை இழிவானது, இது நீங்கள் வகிக்கும் பதவியை நியாயப்படுத்தாது. நீங்கள் அவையின் சூழலை சீர்குலைத்துவிட்டீர்கள். நீங்கள் அதை வேண்டுமென்றே செய்திருக்கிறீர்கள்" என்று கூறினார்.
நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவரப்பட உள்ள நிலையில் டெரெக் ஓ பிரையன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதன் அல்லது வியாழன் அன்று நம்பிக்கை வாக்கெடுப்புடன் தீர்மானம் மீதான விவாதமும் நடைபெறும். ஏற்கெனவே மக்களவையில் ஆம் ஆத்மி எம்.பி சுஷில் குமார் ரிங்கு சில நாட்களுக்கு முன்பு இக்கூட்டத்தொடர் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.