காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத்: ஹரியானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு


புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா. இவர்களில் வினேஷ் போகத், சமீபத்தில் நடந்துமுடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், 50 கிலோ எடைப்பிரிவில், 100 கிராம் உடல் எடை அதிகரித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெள்ளிபதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரன் சிங்குக்கு எதிராக கடந்தாண்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்தபுதன்கிழமை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர்.

இந்நிலையில் அவர்கள் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தபின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இது குறித்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று பேட்டியளித்த வினேஷ் போகத் கூறியதாவது:

நான் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஏனென்றால், நாங்கள் தெருவில் இறங்கி போராடியபோது, பாஜக தவிர பிறகட்சிகள் எங்களுக்கு ஆதரவாக இருந்து எங்களின் வேதனையை புரிந்து கொண்டன. பெண்களுக்கு எதிரான அநீதிக்கு குரல் கொடுக்கும் கட்சியுடன் என்னை இணைத்துக் கொண்டதில் பெருமைபடுகிறேன். நாட்டு மக்களுக்கு சேவையாற்ற கடவுள் வாய்ப்பு வழங்கியுள்ளார். இவ்வாறு வினேஷ் போகத் கூறினார்.

பஜ்ரங் பூனியா கூறுகையில்,‘‘பெண்களுக்காக குரல் கொடுத்தகட்சியில் நாங்கள் இணைந்துள்ளோம். மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி காங்கிரஸ் கட்சியைவலுப்படுத்துவோம். வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு சென்றபோது அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, சிலர் கொண்டாடினர்’’ என்றார்.

இந்த நிலையில் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. மேலும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதே போல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு செயல் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

x