உலகத்தரத்துடன் அதிரடி மாற்றம் காணப்போகும் ரயில் நிலையங்கள்... அசத்தல் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம்!


ரயில் நிலையத்தில் ஆய்வு

மதுரை கோட்டத்தில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 15 ரயில் நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே தனது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், பயணிகளின் அனுபவத்தையும், வசதியையும் மேம்படுத்துவதற்கும் பெரிய மாற்றத்தை மேற்கொள்ள உள்ளது. இதற்காக அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்ட நிலையங்கள், உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் பயனீட்டாளர்களின் நலனுக்காக பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மின்மயமாக்கல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆக. 6-ம் தேதி அன்று பிரதமர் மோடி, இந்திய ரயில்வேயில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டுகிறார்.

இத்திட்டத்தின் முதல் பகுதியாக, மதுரை கோட்டத்தின் 15 ரயில் நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி பழநி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், விருதுநகர், புனலூர், சோழவந்தான், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம், பரமக்குடி ஆகிய ரயில்நிலையங்கள் தேர்வு செய்யப்படடுள்ளன.

இத்திட்டத்தின்படி நீண்ட கால அணுகுமுறையுடன், தொடர்ச்சியான அடிப்படையில் ரயில் நிலையங்களை மேம்படுத்துதல். நிலையங்களில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக, மாஸ்டர் பிளான்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றை படிப்படியாக செயல்படுத்துதல், நிலையத்தின் அணுகு பகுதி, சுற்றுப் பகுதிகள், காத்திருப்பு கூடங்கள், கழிப்பறைகள், தேவையான லிஃப்ட்/எஸ்கலேட்டர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தூய்மை, இலவச இணைய வசதி, 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' போன்ற திட்டங்களின் மூலம் உள்ளூர் தயாரிப்புகளுக்கான கியோஸ்க்குகள், பயணிகள் தகவல் அமைப்புகள், எக்சிகியூடிவ் ஓய்வறைகள், வணிக கூட்டங்களுக்கான அரங்குகள் , பூங்காக்கள், நிலைய கட்டிடத்தை மறுவடிமைப்பு செய்து மேம்படுத்துதல், நகரின் இருபுறமும் நிலையத்தை ஒருங்கிணைத்தல், பன்முக ஒருங்கிணைப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், சுற்றுச்சூழலுக்கு ஏதுவான அமைப்புகள், ஜல்லிக்கற்கள் இல்லாத நடைமேடை தண்டவாளங்களை வழங்குதல், தேவை மற்றும் சாத்தியக்கூறுகளின்படி ‘ரூப் டாப் பிளாசாக்கள்’மற்றும் சிட்டி சென்டர்களை உருவாக்குதல் என திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்தில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, கொடைக்கானல் ரோடு, ஒட்டன்சத்திரம், கல்லிடைக்குறிச்சி, செங்கோட்டை, தேனி, மானாமதுரை , சிவகங்கை, உடுமலைப்பேட்டை, நாசரேத், குந்தாரா, கொட்டாரக்கரை, மண்டபம். ஆகிய ரயில நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

x