தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமண விழாவை முன்னிட்டு, குஜராத் ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்கள் சர்வதேச அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம், ஜாம் நகரில் ப்ரீ வெட்டிங் ஷுட் உள்ளிட்ட திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், உலக தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கிய விருந்தினர்கள் வருகை தந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக ஜாம் நகர் நட்சத்திர பட்டாளங்களால் நிறைந்துள்ளது.
இந்நிலையில் ஜாம் நகர் விமான நிலையத்துக்கு பத்து நாள்களுக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அம்பானி வீட்டு திருமண நிகழ்வுக்காக மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக கூறி, சமூக வலைதளங்களில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
தமிழக எம்பி-சு.வெங்கடேசன், 'மோடி அரசின் மெகா மொய்' என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், "முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து. 6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு. ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4வது சர்வதேச விமான நிலையம் என்று கேள்வி கேட்டவர்கள் தான் இவர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் ஜாம் நகர் விமான நிலைய விவகாரத்தை வைத்து மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!