சட்டப்பிரிவு 370 அவ்வளவுதான்; மீண்டும் கொண்டுவரப்படாது: ஜம்மு காஷ்மீரில் அமித்ஷா உறுதி


புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 வது பிரிவு வரலாறு ஆகிவிட்டது. அது ஒருபோதும் திரும்பாது, அதை நாங்கள் நடக்க விட மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டது.

தேர்தல் அறிக்கை வெளியீட்டில் பேசிய அமித் ஷா, “சுதந்திரம் பெற்றதில் இருந்து, ஜம்மு காஷ்மீர் பிரச்சினை எங்கள் கட்சிக்கு முக்கியமானதாக இருந்து வருகிறது, மேலும் இந்த பகுதியை இந்தியாவுடன் வைத்திருக்க நாங்கள் எப்போதும் முயற்சி செய்து வருகிறோம்.

பண்டிட் பிரேம்நாத் டோக்ராவின் போராட்டம் முதல் சியாமா பிரசாத் முகர்ஜியின் தியாகம் வரை, இந்த போராட்டம் முதலில் ஜனசங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் பாஜகவால் முன்னெடுக்கப்பட்டது, ஏனெனில் ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகும். அது அப்படியே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஜம்மு காஷ்மீர் 2014 வரை பல்வேறு மாநில மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் ஸ்திரமின்மையை எதிர்கொண்டது.

மற்ற அனைத்து அரசாங்கங்களும் ஜம்மு-காஷ்மீர் நிலைமையைச் சமாளிக்க திருப்திப்படுத்தும் அரசியலைச் செய்தன. இருப்பினும், இந்தியா மற்றும் ஜம்மு-காஷ்மீர் வரலாற்றை எழுதும் போதெல்லாம், 2014 மற்றும் 2024 க்கு இடைப்பட்ட காலம் பொன்னான வார்த்தைகளில் எழுதப்படும்" என்று கூறினார்.

மேலும், “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 வது பிரிவு வரலாறு ஆகிவிட்டது. அது ஒருபோதும் திரும்பாது, அதை நாங்கள் நடக்க விட மாட்டோம். சட்டப்பிரிவு 370 இளைஞர்கள் கையில் ஆயுதங்களையும் கற்களையும் கொடுத்த விஷயம்" என்று தெரிவித்தார்

2019ல் ரத்து செய்யப்பட்ட 370வது சட்டப்பிரிவை மீட்டெடுப்போம் என, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறவுள்ள இந்த முதல் சட்டமன்றத் தேர்தலில், ஜம்மு-காஷ்மீர் மக்கள் 370 விதியை நீக்கியதை எப்படி பார்க்கிறார்கள் என்று அறியவும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

x