புதுடெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ராஜேந்திர பால் கவுதம் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இது இண்டியா கூட்டணியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
சீமாபுரியைச் சேர்ந்த முக்கிய தலித் தலைவரும், எம்எல்ஏவுமான ராஜேந்திர பால் கவுதம், காங்கிரஸின் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், தேவேந்திர யாதவ், பவன் கேரா ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
வரவிருக்கும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்காக, இண்டியா கூட்டணி கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், இந்த செயல் ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
வழக்கறிஞரான ராஜேந்திர பால் கவுதம், 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவர் 2020ம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலில் சீமாபுரி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் ஆம் ஆத்மி அரசாங்கத்தில் சமூக நலன், எஸ்சி & எஸ்டி, நீர் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைளின் அமைச்சராக பதவி வகித்தார்.
2022 அக்டோபரில் சுமார் 10,000 பேர் பௌத்த மதத்திற்கு மாறிய ஒரு மதமாற்ற நிகழ்வில் கலந்து கொண்டதற்காக விமர்சனங்களை எதிர்கொண்ட ராஜேந்திர பால் கவுதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆம் ஆத்மி எம்எல்ஏ கர்தார் சிங் தன்வார் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜேந்திர பால் கவுதம் வெளியேறுவது அக்கட்சியில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.