உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரும் 19-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை இன்று, நடைபெற்றது. நாளையும் நடைபெற உள்ளது. இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழுவுக்கு சொந்தமாக 20 விமானங்கள் உள்ளன.
ஆனால், விமான சாகசங்களுக்கு 9 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குழு நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான கண்காட்சிகளில் அதன் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இறுதிப் போட்டியை நேரில் காண பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்போது பிரதமர் மோடி, வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.