பாஜகவில் சீட் மறுப்பு: ஹரியாணா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரஞ்சித் சிங் சௌதாலா!


சண்டீகர்: சட்டமன்றத் தேர்தலில் பாஜகவில் சீட் மறுக்கப்பட்டதால், ஹரியாணா மாநில அமைச்சர் ரஞ்சித் சிங் சௌதாலா இன்று அமைச்சரவையில் இருந்து விலகினார்.

முன்னாள் ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் சகோதரர் ரஞ்சித் சௌதாலா, சிர்ஷா மாவட்டத்தில் உள்ள ரணியா தொகுதியில் போட்டியிட பாஜகவில் சீட் கேட்டிருந்தார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக சார்பில் 67 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியானது. இப்பட்டியலில் ரஞ்சித்சிங் சௌதாலா பெயர் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக ரணியா தொகுதியில் ஷிஷ்பால் கம்போஜ் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ரஞ்சித் சிங் சௌதாலா இன்று அமைச்சரவையில் இருந்து விலகினார்.

ரணியா தொகுதியில் சுயேட்சை எம்எல்ஏவாக இருந்த ரஞ்சித் சௌதாலா, மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜகவில் சேர்ந்தார். அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹிசார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

ஆனாலும், சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் ஒருவர் ஆறு மாதங்கள் அமைச்சராக இருக்க முடியும் என்று விதிகளின்படி ரஞ்சித் சௌதாலா மாநில மின்துறை அமைச்சராக தொடர்ந்தார். முன்னாள் துணை பிரதம மந்திரி தேவி லாலின் மகன் ரஞ்சித் சௌதாலா, காங்கிரஸால் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி 2019 சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

ஹரியாணா சட்டசபைக்கு அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது, முடிவுகள் அக்டோபர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

x