அதிரடியாக செயல்பட முடியாது: சிபிஐ கைது குறித்து கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வாதம்


கோப்புப்படம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு அரசியலமைப்பு பதவியில் இருப்பவர், எங்கும் தப்பிச் செல்லக் கூடியவரில்லை என்று மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் அவர், கைது நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்கு தேவை, நீங்கள் அவசரமாக, அதிரடியாக செயல்பட முடியாது என்றும் வாதிட்டார்.

மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) கைது நடவடிக்கையை எதிர்த்தும், வழக்கமான ஜாமீன் கோரியும் டெல்லி முதல்வர் தாக்கல் செய்ய மனுவினை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணை செய்தது. அப்போது அரவிந்த் கேஜ்ரிவால் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவர் தனது வாதத்தின் போது, "டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ பதிவு செய்யத அசல் முதல் தகவல் அறிக்கையில் அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. சுமார் 8 மாதங்கள் வரை அவர் சாட்டியாகக் கூட விசாரணைக்கு அழைக்கப்படவில்லை.

கடந்த மார்ச் மாதம் அவர் (கேஜ்ரிவால்) அமலாக்கத்துறையால் தான் கைது செய்யப்பட்டார். சிபிஐ அவரைக் கைது செய்யவில்லை. 2023-ல் தொடங்கப்பட்ட வழக்குக்கு 2024-ல் கைது நடவடிக்கை மேற்கொள்ள எது வழிவகுத்தது. அமலாக்கத்துறை வழக்கில் இரண்டு குறிப்பிடத்தக்க உத்தரவுகள் உள்ளன. முதலில் உச்ச நீதிமன்றம் அவர் சமூகத்துக்கு அச்சுறுத்தலான நபர் இல்லை என்று தெரிவித்திருந்தது. நீதிமன்றும் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இரண்டாவது உத்தரவு, விசாரணை நீதிமன்றம் வழங்கிய வழக்கமான ஜாமீன். பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதி கண்ணா தலைமையிலான அமர்வின் விரிவான உத்தரவு வருகிறது.

நான் (அரவிந்த் கேஜ்ரிவால்) இடைக்கால ஜாமீன் முடிவடைந்து ஜூன் 2ம் தேதி மீண்டும் சிறைக்குச் செல்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு ஜூலை 12ம் தேதி தான். பின்னர் இரண்டு ஆண்டுகளாக எந்த கைது நடவடிக்கையிலும் ஈடுபடாத சிபிஐ ஜூன் 25-ம் தேதி இந்த கைது நடவடிக்கையில் ஈடுப்பட்டது. இது ஒரு இன்சூரன்ஸ் கைது.

அரவிந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பம் அளிக்கிறது. அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. திஹார் சிறையில் அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. பின்னர், பிரிவு 14 ஏ-யின் படி எந்த நியமாயமும் இணக்கமும் இல்லாமல், கேஜ்ரிவாலை கைது செய்யவேண்டும் என்று ஒரு விண்ணப்பத்தை சிபிஐ தாக்கல் செய்தது.

கேஜ்ரிவால் ஒரு விடுமுறை கால நீதிமன்றத்தின் நீதிபதி முன்பே ஆஜர்படுத்தப்பட்டார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, பதில் அளிப்பதைத் தவிர்த்தார் என்ற அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். எந்த அடிப்படையும் இல்லாமல் செய்ய முடியாது. நீங்கள் அவசரமாகவும் அதிரடியாகவும் செயல்பட முடியாது" என்று வாதிட்டார்.

கேஜ்ரிவால் ஜாமீனுக்கு சிபிஐ எதிர்ப்பு: டெல்லி முதல்வர் அவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீனுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மத்திய புலனாய்வு அமைப்பு, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலை இணைகுற்றவாளியாக கருதக் கூடாது. அரவிந்த் கேஜ்ரிவாலின் கைதில் எந்த சட்ட மீறல்களும் நடக்கவில்லை. அவர் இந்த வழக்கை அரசியல் ரீதியாக பரபரப்பாக முயற்சிக்கிறார் என்று தெரிவித்துள்ளது.

x