புதுடெல்லி: ஏஎன்ஐ பக்கத்தில் அவதூறான திருத்தங்களைச் செய்தவர்கள் பற்றிய தகவல்களை விக்கிப்பீடியா வெளியிடத் தவறியதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக விக்கிப்பீடியாவிற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
ஏஎன்ஐ வழக்கில் விக்கிபீடியாவின் நடத்தைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி நவீன் சாவ்லா, "உங்களுக்கு இந்தியாவை பிடிக்கவில்லை என்றால், தயவுசெய்து இந்தியாவில் வேலை செய்ய வேண்டாம். இந்தியாவில் விக்கிபீடியாவைத் தடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்போம்” என்று அவர் தெரிவித்தார். மேலும், விக்கிபீடியாவின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அக்டோபர் 25 அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விக்கி பக்கத்தில் அவதூறான உள்ளடக்கத்தை அனுமதித்ததற்காக விக்கிப்பீடியாவை எதிர்த்து ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், அவதூறு செய்தி வெளியிட்டதற்கு இழப்பீடாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.
விக்கிபீடியா தனது பக்கத்தில் ஏஎன்ஐ பற்றி அவதூறான திருத்தங்களை அனுமதித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியது. மேலும், ஏஎன்ஐ தற்போதைய அரசாங்கத்திற்கு "பிரச்சார கருவி" என்று குறிப்பிடுவதாகவும் புகாரில் குறிப்பிட்டது. போலி செய்தி இணையதளங்களில் இருந்து ஏராளமான தகவல்களை ஏஎன்ஐ வழங்குவதாகவும் விக்கிபீடியா கூறியுள்ளது. நிகழ்வுகள் குறித்து தவறாக செய்திகளை ஏஎன்ஐ வெளியிட்டதாகவும் விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம் விக்கிபீடியாவுக்கு சம்மன் அனுப்பியதோடு, ஏஎன்ஐயின் விக்கிப்பீடியா பக்கத்தில் திருத்தங்களைச் செய்த மூன்று பேர் பற்றிய தகவல்களை வெளியிடுமாறும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி ஏஎன்ஐ உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல் செய்தது.
விக்கிபீடியாவின் வழக்கறிஞர், விக்கிபீடியா இந்தியாவில் இல்லை என்பதால் அவர்கள் ஆஜராக கால அவகாசம் தேவைப்படுவதாக கூறினார். இந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியது.