வயநாடு நிவாரண பணிக்கு ரூ.2 லட்சம் வழங்கிய ராகுல் காந்தி


புதுடெல்லி: கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்ட நிவாரணப் பணிகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலச்சரிவில் மலைப்புற கிராமங்கள் புதையுண்டதில்400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி தனது ஒரு மாத சம்பளமான ரூ.2.30 லட்சத்தை வயநாடு நிவாரணப் பணிகளுக்கு வழங்கியுள்ளார். இது தொடர்பாக ரூ.2.30 லட்சத்துக்கான தனது பங்களிப்புக்கான ரசீதை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மற்றவர்களும் தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது பதிவில், “வயநாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகள் பெரும் துயரத்தை அனுபவித்துள்ளனர். அவர்கள் எதிர்கொண்ட கற்பனையிலும் நினைத்திராத இழப்புகளில் இருந்து மீளஅவர்களுக்கு நமது ஆதரவு தேவை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு உதவிட நான் எனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளேன். சக இந்தியர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தொடங்கியுள்ள ‘Stand With Wayanad’ என்ற செயலி மூலமாகவும் வயநாடுக்கு மக்கள் நன்கொடை வழங்கலாம் என்றும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்

x