குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள 10 மாடி கொண்ட ராஜஸ்தான் மருத்துவமனையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
குஜராத் தலைநகர் அஹமதாபாத்தில் சாஹிபாக் என்ற பகுதி உள்ளது. இங்கு ராஜஸ்தான் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. 10 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட தகவலை அடுத்து 20 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு சிகிச்சை பெற்று வந்த 125 நோயாளிகள் அருகில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.