'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!


இளவரசி சிவரஞ்சனி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமைந்துள்ள உமைத் பவன் அரண்மனையை சொகுசு தங்குமிடம், ஆடம்பர திருமண மண்டபம் மற்றும் சுற்றுலா தலமாக மாற்றி மிகத் திறமையாக தொழிலை நிர்வகித்து வருகிறார் அந்த அரண்மனையின் இளவரசி சிவரஞ்சனி ராஜ்யேவோ.

1929 நவம்பர் 18-ம் தேதி தொடங்கிய உமைத் பவன் அரண்மனையின் கட்டுமானப் பணிகள் 1943-ம் ஆண்டில் நிறைவு பெற்றன. மேற்கத்திய தொழில் நுட்பங்களுடன், இந்திய கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை ராஜபுத்திரர் காலத்தின் பெருமைக்குச் சான்றாக திகழ்கிறது.

சுமார் 26 ஏக்கர் பரப்பளவில், 347 அறைகளைக் கொண்டுள்ள அரண்மனை அரசு குடியிருப்பு, ஆடம்பரமான தாஜ் பேலஸ் ஓட்டல் மற்றும் ஒரு அருங்காட்சியகம் என மூன்று செயல்பாட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த 1971-ம் ஆண்டில் காஜ் சிங், அரண்மனையின் ஓர் பகுதியை சொகுசு தங்குமிடமாக மாற்றினார்.

இதனை தற்போது தாஜ் ஓட்டல் நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இவை தவிர லக்சரியான பேலஸ் திருமண மண்டபமாகவும் அவ்வப்போது ஜொலித்து, தம்பதிகளை இணைக்கிறது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது காதலரை மணம் முடித்தது உமைத் பவனில் தான்.

அரண்மனையின் முன்பாக சிவரஞ்சனி

அரண்மனையின் மன்னர் காஜ் சிங். காஜ் சிங்கின் மூத்த மகள் சிவரஞ்சனி. அவரது இளைய சகோதரர் சிவராஜ் சிங் குடும்பச் சொத்துக்களின் அதிகாரப்பூர்வ வாரிசாக இருந்தாலும், சிவரஞ்சனி அவரது தந்தையுடன் இணைந்து கோட்டைகள், அரண்மனை அருங்காட்சியங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்ளடக்கிய குடும்பத்தின் வணிகத்தை வளர்த்து வருகிறார்.

"பாரம்பரியச் சொத்துக்கள் விற்கப்படும்போதும் அல்லது பிரிக்கப்படும்போதும் அவற்றின் மதிப்பை இழக்கின்றன" என்று கூறும் சிவரஞ்சனி அரண்மனையின் சொத்துகளை வணிகமாக்கி அதன் மதிப்பை பெருக்கி வருகிறார்.

இசை ஆர்வம் கொண்ட சிவரஞ்சனி, அரண்மனை நிர்வகிக்கும் நாகவுரில் உள்ள மிகவும் பிரபலமான மெஹ்ரான்கர் கோட்டை மற்றும் அஹிசத்ரகர் கோட்டையில் இசை திருவிழாவினையும் நடத்தி வருகிறார்.

இளவரசி சிவரஞ்சனி

"சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, நாகவுரில் உள்ள சொத்தை மீட்டெடுக்க மானியம் கிடைத்தது. அஹிசத்ரகர் கோட்டை மீட்டெடுக்கப்பட்டு யுனெஸ்கோ விருதைப் பெற்றது. அதன் பிறகு மக்கள் இங்கு வந்து அதன் அழகைக் காண வேண்டும் என தீர்மானித்து, அதற்காக திட்டம் தீட்டினோம். மக்கள் வருகைப்புரிந்து, தங்கி பாரம்பரிய இசையைப் பார்ப்பதற்காக இசை விழாவைத் தொடங்கினோம்," என்கிறார் சிவராஞ்சனி.

ஆண்டுக்கு 8 மாதங்கள் திருவிழாக்கள் மற்றும் ஓட்டல்களால் மக்கள் கூட்டம் ஜோத்பூரில் நிரம்பி வழிகிறது. இதனால் மன்னர் குடும்பத்தின் பொருளாதாரம் மிக நல்ல வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

x