ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 2 பேரணிகளில் பங்கேற்று காங்கிரஸின் பிரச்சாரத்தை துவங்கி வைக்கும் ராகுல்


புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை ஜம்மு காஷ்மீரில் இரண்டு பேரணிகளில் பங்கேற்று கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மூன்று கட்டங்களாக நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்தில் இரண்டு பேரணிகளில் அவர் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இதற்காக ராகுல் காந்தி வரும் சிறப்பு விமானம் காலை ஜம்மு விமானநிலையத்துக்கு வரும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. விமானநிலையத்தில் இருந்து, ராகுல் காந்தி ராம்பன் மாவட்டத்தின் சங்கல்தானுக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கு நடக்கும் பேரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விகார் ரசூல் வாணியை ஆதரித்துப் பேசுகிறார்.

சங்கல்தான், ஜம்மு பிரிவின் ராம்தன் மாவட்டத்தின் பனிஹால் சட்டப்பேரவைத் தொகுதியின் ஒருபகுதியாகும். பனிஹால் தொகுதிப் பங்கீட்டில் ஓர் உடன்பாடு எட்டப்படாத நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி இரண்டும் அங்கு தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

சங்கல்தானில் இருந்து ராகுல் காந்தி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தூரு தொகுதிக்கு செல்ல உள்ளார். பகல் 12.30 மணிக்கு தூரு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிஸ் வேட்பாளர் ஜி.ஏ. மிர்-ஐ ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கிறார். இது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களின் தொடர் பிரச்சாரத்தின் தொடக்கமாகும்.

பின்னர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களுடன் ஜம்மு காஷ்மீரின் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பிராந்திய காங்கிரஸ் கமிட்டியின் மூன்று முன்னாள் தலைவர்களான விகார் ரசூல் வாணி, ஜி.ஏ.மிர் மற்றும் பீர்ஷாதா சையீத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மாநில சட்டப்பேரவையின் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18ம் தேதி நடக்க இருக்கிறது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி இரண்டும் தேர்தலுக்கு முன்பு கூட்டணியை அறிவித்துள்ளன. இதில் தேசிய மாநாட்டு கட்சி 52 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளிலும், சிபிஐ (எம்) மற்றும் சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடுகின்றன.

இதனிடையே, ஜம்மு பகுதியின் நக்ரோடா, பாதேர்வா, பனிஹால் மற்றும் தோடா, காஷ்மீர் பகுதியின் சோபோரே ஆகிய இடங்களில் என்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் எதிரெதிராக வேட்பாளர்களை நிறுத்துகின்றன. இதனை நட்பு போட்டி என்று அக்கூட்டணி அழைக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காஷ்மீரில் 47 தொகுதிகளும், ஜம்முவில் 43 தொகுதிகளும் உள்ளன. இவைகளில் 9 தொகுதிகள் பழங்குடியினருக்கும், ஏழு தொகுதிகள் பட்டியல் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

x