நாடு முழுவதும் 3 மாதங்களில் 52 கோடி மரக்கன்று நடப்பட்டன: மத்திய அமைச்சர் பெருமிதம்


கோப்புப் படம்

புதுடெல்லி: கடந்த ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, “தாயின் பெயரில் ஒரு மரம்” இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்று ஒன்றை பிரதமர் நட்டார். பூமியின் ஆரோக்கியத்தை பேண நாட்டு மக்கள் அனைவரும் இதேபோன்று உற்சாகமாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும்படி பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மரம் நடும் இயக்கத்தை தேசிய அளவில் முன்னெடுத்தார். இது பற்றி அவர் அண்மையில் கூறுகையில், “வேளாண்மை துறைக்கு உட்பட்ட வேளாண் மையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அலுவலகங்களில் நமது ஊழியர்கள் மரக்கன்றுகளை நடுவார்கள். எதிர்கால சந்ததியினருக்கு வேண்டி இந்த பூமியை நாம் பாதுகாத்திட வேண்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட வேண்டும். குறைந்தபட்சம் நாம் உயிர் வாழ்ந்திட சில ஏற்பாடுகளை நாம் செய்தாக வேண்டும். அதற்கு நமக்கு போதுமான அளவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மரக்கன்றுகளை நட்டு வளர்த்திட வேண்டும்” என்றார். இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் நேற்று கூறும்போது, “தாயின் பெயரில் ஒரு மரம்” இயக்கம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 3 மாதங்களில் 52 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன’’ என்றார்

x