ரம்ஜான் பண்டிகை நாளில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆதரவாக டி-சர்ட் அணிந்தவரிடம் பறிமுதல் செய்த பாஸ்போர்ட்டைத் திரும்ப வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்தவர் முகமது ரில்வான். இவர் நண்பர்களுடன் 29.7.2014-ல் ரம்ஜான் பண்டிகை நாளில் தொண்டி பீச் பள்ளிவாசலில் ‘வீ ஆர் ஆல் ஐஎஸ்ஐஎஸ்' என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி- சர்ட் அணிந்தபடி நிற்கும் புகைப்படம் முகநூலில் வெளியானது. இதையடுத்து முகமுது ரில்வான் உட்பட பலர் மீது தொண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கால் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்குமாறு மதுரை பாஸ்போர்ட் அலுவலர் 24.3.2015-ல் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி முகமது ரில்வான் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று விசாரித்தார்.அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில்," மனுதாரர் மீதான குற்ற வழக்கு 4.8.2014-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது 2023 ஜூலை. கடந்த 9 ஆண்டுகளாக மனுதாரர் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. இந்த வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பும் மனுதாரர் மீது எந்த வழக்கும் இல்லை. மனுதாரர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கோட்பாடுகளை ஏற்கவில்லை என்றும், அதன் கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகளைக் கண்டிப்பதாகவும் வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளார். என்னவாக இருந்தாலும் மனுதாரர் குற்ற வழக்கை சந்தித்து தான் நிரபராதி என நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரரால் கடந்த 9 ஆண்டுகளாக வெளிநாடு வேலைக்குச் செல்ல முடியவில்லை. பாஸ்போர்ட் அலுவலருக்கு அதிகாரம் இருப்பதால் அவர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய முடியாது. அந்த நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும். மனுதாரர் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ளார். அதை அவரிடம் திரும்ப வழங்க வேண்டும். மனுதாரர் மீதான வழக்கை திருவாடனை நீதிமன்றம் 6 மாதத்தில் முடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.