அதிர்ச்சி... பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து... மாணவிகள் உட்பட 11 பேர் பலியான சோகம்!


கூரை இடிந்து விழுந்த உடற்பயிற்சிக் கூடம்

வட கிழக்கு சீனாவில், பள்ளி ஒன்றின் உடற்பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மாணவிகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளியில் பயிலும் குழந்தைகள் ஆவர்.

ஹெய்லாங் ஜியாங் மாகாணத்தின் கிகிஹார் நகரில் செயல்படும் நடுநிலைப்பள்ளி ஒன்றின், பெண்கள் வாலிபால் அணியை சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஜிம்னாசியம் அரங்கின் கூரை தளத்தில் வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருட்கள், மழையில் ஊறியதன் காரணமாக அவற்றின் கனம் அதிகரித்து கூரை இடிந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பள்ளியின் வாலிபால் குழுவைச் சேர்ந்த 19 பேர் இந்த விபத்தில் சிக்கினார்கள். அவர்களின் பெரும்பாலானோர் மாணவிகள் ஆவர். இவர்களில் 11 பேர் உயிரிழந்த விவரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உடல் சிதைந்தது மற்றும் முகத்தில் சகதி சேர்ந்தது உள்ளிட்ட காரணங்களினால் தங்கள் குழந்தைகளை அடையாளம் காண வழியின்றி பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

இதனிடையே சீனாவின், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில், பொறுப்பற்ற கட்டுமானப் பணிகளின் காரணமாக அதிக எண்ணிக்கையிலான விபத்துகளும், உயிர்பலிகளும் நிகழ்வது தொடர்கதையாக இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

x