ஜம்முவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்: ராணுவ வீரர் காயம்


ஜம்மு காஷ்மீர்: ஜம்முவின் சுஞ்ச்வான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். பயங்கரவாதிகள் ராணுவ முகாமுக்கு வெளியே இருந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அப்பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இன்று காலை ஜம்முவில் உள்ள சுஞ்ச்வான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார். இதனையடுத்து, அப்பகுதிக்கு ராணுவப்படைகள் விரைந்துள்ளன. மேலும், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க இராணுவம் ஆளில்லா விமானங்களை அனுப்பியுள்ளது.

சுஞ்சுவான் படைப்பிரிவின் முகாம் மீது காலை 10 மணி முதல் 10.30 மணி வரை தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் சுனீல் பர்ட்வால் தெரிவித்தார். இதனையடுத்து ராணுவ செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், பாதிப்பு குறித்த விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த முகாம், அடர்த்தியான மக்கள்தொகையால் சூழப்பட்டுள்ள ஜம்மு நகரின் மிகப்பெரிய இராணுவ தளமாகும். பிப்ரவரி 2018ல், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் இந்த தளத்தின் மீது நுழைந்து ஆறு வீரர்களையும், பொதுமக்கள் ஒருவரையும் கொன்றனர்.

செப்டம்பர் 18-ம் தேதி முதல் மூன்று கட்டமாக ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் விரைவில் பிரச்சாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

x