ஓநாய்கள் மீண்டும் அட்டூழியம்: தாக்குதலில் 3 வயது சிறுமி பலி; உ.பியில் தொடரும் சோகம்


உத்தரப் பிரதேசம்: பஹ்ரைச்சில் நேற்று இரவு ஓநாய்கள் தாக்கியதில் மூன்று வயது சிறுமி உயிரிழந்ததுடன், இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

பஹ்ரைச் மாவட்டத்தின் தெப்ரா கிராமத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஓநாய்களை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், ஆறு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிறுமி கொல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய பஹ்ரைச் மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணி, "இந்த சம்பவம் டெப்ரா கிராமத்தில் நடந்துள்ளது. 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். 2 பெண்கள் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். ஓநாய்கள் 5-6 நாட்களுக்குப் பிறகு அதன் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது, இது வேறு கிராமம். இப்போது ஓநாய்களால் ஒரு புதிய கிராமம் குறிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷனில் ஒவ்வொரு முறையும் இதுவே மிகப்பெரிய தடையாக இருக்கிறது. ஓநாய்களைப் பிடிக்க வனத்துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது" என்று கூறினார்.

ஓநாய்களை பிடிக்கும் 'ஆபரேஷன் பேடியா' பற்றி பேசிய தலைமை வனப் பாதுகாவலர் (மத்திய மண்டலம்) ரேணு சிங், “பஹ்ரைச்சில் கடந்த இரண்டு மாதங்களில் ஓநாய்களின் தாக்குதலில் 7 குழந்தைகளும், ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். இதுவரை நான்கு ஓநாய்கள் பிடிபட்டுள்ளன, இன்னும் இரண்டு ஓநாய்கள் எஞ்சியுள்ளன. மீதமுள்ள ஓநாய்களின் நடமாட்டத்தை ட்ரோன்கள் மூலம் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். எங்கள் குழுக்கள் தொடர்ந்து ரோந்து வருகின்றன. விரைவில் அவற்றைப் பிடிக்க முயற்சிக்கிறோம்.

நாங்கள் நேற்றிரவு மற்றும் காலையில் ஓநாய்களைப் பார்த்தோம். ஆனால் அவை நழுவிவிட்டன. ஞாயிற்றுக்கிழமை காலை ஓநாய்களைப் பிடிக்க குழு முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் பிடிக்க முடியவில்லை" என்று அவர் கூறினார்.

மேலும், "மக்கள் வீட்டிற்குள் தூங்க வேண்டும் என்பது எனது வலுவான வேண்டுகோள். முன்பு ஓநாய்களால் தாக்கப்பட்டவர்கள் வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். விலங்குகள் தங்கள் பழக்கத்தை மாற்றாது. ஆனால் நாம் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கலாம். சனிக்கிழமை இரவு, ஒன்பது வயது சிறுவன் ஒருவனை ஓநாய் தாக்கியது. 55 வயதுடைய நபர் ஒருவரும் வேறு ஒரு சம்பவத்தில் தாக்கப்பட்டார். இருவரும் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர்” என்று கூறினார்.

x