டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கான் கைது: அமலாக்கத்துறை அதிரடி


டெல்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் 6 மணி நேரம் சோதனை நடத்திய பிறகு அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லி ஓக்லாவில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் நடந்த சோதனையைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமனதுல்லா கான், பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி வக்ஃப் வாரிய நியமனங்கள் மற்றும் அதன் சொத்துகளை குத்தகைக்கு விட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக இதுகுறித்து அமனதுல்லா கான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘அமலாக்கத்துறை நபர்கள் என்னைக் கைது செய்ய என் வீட்டிற்கு வந்துள்ளனர். காலை ஏழு மணி ஆகிறது, தேடுதல் வாரண்ட் என்ற பெயரில் அமலாக்கத்துறை என்னைக் கைது செய்ய வந்துள்ளது. என் மாமியார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் தற்போது என் வீட்டில் இருக்கிறார். நான் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

அவர்கள் ஒவ்வொரு நோட்டீஸுக்கும் கடந்த இரண்டு வருடங்களாக என்னைத் தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள். எங்கள் கட்சியை உடைப்பது மட்டுமே அவர்களின் நோக்கம். நாங்கள் தலைவணங்கப் போவதில்லை, கட்சியை உடைக்கப் போவதில்லை’ என்று கூறினார்.

x