கயிற்றில் தூக்கி செல்லப்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து விபத்து


கேதார்நாத்: உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் பழுதடைந்த ஹெலிகாப்டர் ஒன்றை தூக்கிச் செல்ல நேற்று ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.

பழுதடைந்த ஹெலிகாப்டரை கயிறு கட்டி தூக்கியபடிவானில் பறந்துகொண்டிருந்த சமயத்தில், திடீரென ராணுவ ஹெலிகாப்டர் நிலை தடுமாறியது. இதையடுத்து அதனுடன் கட்டப்பட்டிருந்த பழுதடைந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து ருத்ரபிரயாக் மாவட்ட சுற்றுலா அதிகாரி ராகுல் சவுபே கூறியதாவது:

கடந்த மே மாதத்தில், கேதார்நாத்துக்கு வந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்தது. இந்நிலையில் அந்த ஹெலிகாப்டரை பழுது பார்க்கும் இடத்துக்கு கொண்டு செல்ல நேற்று இந்திய விமானப் படையின் எம்ஐ17 ஹெலிகாப்டர் பயன்படுத்தப் பட்டது. பழுதடைந்த ஹெலிகாப்டரை கயிறு மூலம் தூக்கியபடி ராணுவ ஹெலிகாப்டர் வானில்பறந்தது. சிறிது தூரம் பறந்தபிறகு, பழுதடைந்த ஹெலிகாப்டரின் எடை காரணமாகவும், பலமாக வீசிய காற்றின் காரணமாகவும் ராணுவ ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது. இதையடுத்து விமானி, பழுதடைந்த ஹெலிகாப்டருடனான இணைப்பைத் துண்டித்தார்.

மந்தாகினி ஆற்றின் அருகே, அந்த ஹெலிகாப்டர் விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. மாநிலபேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

x